Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வேறு இடம் வேண்டும்” கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

முகாம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்னூர் பகுதியில் இலங்கையின் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இதில் 65 குடும்பங்களை சேர்ந்த 250 நபர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது தமிழக அரசின் சார்பாக மின்னூர் காளியாபுரம் பகுதியில் புதிதாக குடியிருப்புகள் கட்ட அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் அங்கு குடியிருப்புகள் கட்டுவதற்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக தேர்வு செய்துள்ள இடம் போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத மற்றும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது எனவும், தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிவாரத்தில் உள்ளதால் அதற்கு பதில் வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான ஆண்களும், 8 பெண்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் மாற்று இடம் ஒதுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது கலெக்டர் இல்லை, உங்கள் மனுக்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளனர். இருப்பினும் பொதுமக்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |