வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்க மறுத்ததால் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மருக்காலங்குளம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் நகை கடன் வழங்குவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் நேற்று டோக்கன்கள் வழங்கிய நபர்களை நகைக்கடன் பெற்றுக்கொள்வதற்காக வங்கிக்கு அதிகாரிகள் வரச்சொல்லியுள்ளனர். அதனால் பொதுமக்கள் நேற்று வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகள் திடீரென்று யாருக்கும் நகைக் கடன் வழங்கப்படமாட்டாது என அறிவித்ததையடுத்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் திடீர் என்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஊத்துமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.