சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரத்தை சேர்த்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் கொரோனா தொற்று குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து பேரவையில் விளக்கம் அளித்த தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொடர்பான தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன, ஜனவரி மாதமே தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என கூறினார்.
கொரோனா வைரஸை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன, கொரோனா தொற்று குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இதுவரை 1,46,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மதுரை, ஈரோடு, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும். பாதிப்படைந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், குறிப்பாக கேரளத்துக்கு தமிழக மக்கள் செல்வதைத் தவிர்க்கலாம் என வலியுறுத்தியுள்ளார்.