ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு துன்புறுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இது தொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்பித்திருந்தார். அதில் இதுவரை 4.32 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 1லட்சத்து 65 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ஊரடங்கு களங்களில் பொதுமக்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.