கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழ்நாட்டில் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, 144 தடை உத்தரவு இருக்கக்கூடிய இந்நேரத்தில் ஓர் சிறிய தகவல் தெரிவிக்கிறேன். உலக அளவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு, அரசுக்கு ஏற்பட்ட நிலை, மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை , நெருக்கடி இவற்றை அலசிப் பார்க்கும்போது இந்த நோயின் பரவல் வேகம் மிக மிக அதிகமாக உள்ளது.
இந்த கொரோனா வைரஸ், ஒருவருக்கு வந்து, அது 9 பேருக்குச் சென்று, 99 பேருக்கு பரவி, அவர்களிடமிருந்து 999 பேரிலிருந்து, 9 லட்சம், 9 கோடி பேருக்கு பரவக்கூடிய கொடிய நோயாக உள்ளது. உலகளவில் சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் முதல் 15 நாள்கள் பரவியுள்ளது. பிறகு அது மிகவும் வேகமாக பரவத்தொடங்கியது.
இது போன்ற நிலை தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் சர்வதேச விமானம், உள்நாட்டு விமானம், இரயில்வே நிலையம், போக்குவரத்து நிறுத்தம் என தொடங்கி 144 தடை உத்தரவினை (lockdown) முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பாரதப் பிரதமர் 21 நாள்கள் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். 21 நாட்கள் ஏன்? என்றால் மிகவும் முக்கியமான விஷயம், உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்னவென்றால் வைரஸ் 14 நாள்கள் இருக்கும். மேலும், இடையில் இருந்து ஒருவருக்கு வைரஸ் ஏற்பட்டால் கூடுதலாக ஒரு 7 நாட்கள் என 21 நாட்கள் நாம் தனியாக இருந்தால் வைரஸின் தாக்கத்தைத் தடுக்கலாம். தற்போது வந்துள்ள நோயாளிகள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். இதனால் தான் பொதுமக்களாகிய நீங்கள் தயவு செய்து வீட்டில் இருக்க வேண்டும் என கூறுகிறோம்.
சுறுசுறுப்பா இருந்துட்டு 21 நாட்கள் வீட்டுல இருக்குறது கஷ்டமான விஷயம் தான். ஆனா அந்த கஷ்டம் யாருக்காக. அரசாங்கம் யாருக்காக சொல்றாங்க. நீங்க ஒரு ஒருபுறம் யோசிங்க. உங்களுக்காக முக கவசத்துடனும், பாதுகாப்பு கவசத்துடனும் தூக்கம் மறந்து குடும்பம் மறந்து, குழந்தைகள் மறந்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் நோய் பரவக்கூடிய அச்சம் இருந்தும் கூட அதையும் எதிர்கொண்டு களத்தில் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நீங்கள் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தயவு செய்து வீட்டில் இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இது அரசாங்கத்தின் உத்தரவு இதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நாங்கள் அதிகாரத்துடன் சொன்னாலும் கூட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்று 21 நாட்கள் இருந்தால்தான் இந்தியாவையும், குடும்பத்தையும் பேராபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிமுறைகளின்படி சமச்சீரான உணவினை உண்டு, உடற்பயிற்சி, யோகா செய்யுங்கள், புத்தகம் வாசியுங்கள் மியூசிக் கேளுங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக கழியுங்கள்” அன்போடு கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 29, 2020