Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து – ஜி.கே.மணி வரவேற்பு!

5,8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பதை வரவேற்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும் முன்வரவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், ‘5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பதற்கு தான் பாராட்டுகளை தெரிவித்து, இதேபோல் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடக்காது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்’ எனக்கூறினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்; ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘மத்திய அரசு எதன் அடிப்படையில் சோதனை, ஆய்வுகளை செய்கின்றனர் என்று தெரியவில்லை’ என்று கூறினார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் பொதுமக்களும், பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு பற்றி மருத்துவர் ராமதாஸ் பொதுக்குழு தீர்மானம் மூலமாகவும், தனது அறிக்கை மூலமாகவும் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Categories

Tech |