சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 29 மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. நேற்று இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலெட்டர்கள் மற்றும் படுக்கைகள் போன்ற எண்ணிக்கை விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதை நிலையில், இன்று சுகாதாரத்துறை சார்பில் விவரங்களை வெளியிட இணையதளம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.