கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை தொடக்கியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல மதுபானக் கடைகள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மக்களுக்கு உயிரை பற்றி கவலையில்லை என வேதனையுடன் தெரிவித்த அவர், தேவையின்றி வெளியே நடமாட கூடாது என கூறியுள்ளார். மேலும் தடை உத்தரவுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும் என்று தகவல் அளித்துள்ளார்.