புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலகத்திலுள்ள கருத்தரங்கக் கூடத்தில் இன்று நடைபெற்றது. அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் அஸ்வின் குமார் தாமதமாக வந்ததால் அங்கே கூடியிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சிவா புதுச்சேரியில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், இருக்கும் நிதியை வைத்து ஏன் மேம்பாட்டுப் பணிகளை இன்னும் தொடங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்
தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன், ”ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவர், அம்மாநில தலைமைச் செயலரான அஸ்வின் குமார். ஆனால் கூட்டத்தில் அவர் இல்லை. அவர் இல்லாமல் கூட்டம் தேவையா? மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டும் காலத்தோடு ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து, தலைமைச் செயலர் அஸ்வின் குமார் கூட்டத்திற்கு வந்து பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பல்வேறு திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்றும் இதுகுறித்து ஆய்வு செய்யவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.