சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் யுகபாரதி என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 16 ஆயிரத்து 370 பாக்கெட் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உடுமலை சத்திரம் தெருவில் வசிக்கும் வியாபாரியான ஜெயச்சந்திரன் என்பவர் யுகபாரதியிடம் புகையிலை பொருட்களை கொடுத்து வைத்திருந்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யுகபாரதி மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.