மோட்டார் சைக்கிளில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் காவல்துறையினர் வெள்ளக்கோவில் விலக்கு அருகில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன எண் இல்லாத புதிய மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அங்கமங்கலம் பகுதியில் வசிக்கும் சுடலை கண், பாஸ்கர் என்பதும் அவர்கள் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுடலை கண் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 33 ஆயிரத்து 500 மதிப்புள்ள 45 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.