Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணீங்க…? புகார் கொடுத்த மருத்துவர்…. சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்….!!

மருத்துவரின் கார் டயரில் காற்றை திறந்துவிட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை நெடியசாலை பகுதியில் மருத்துவர் ஜெயின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பனச்சமூடு பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகின்றார். எனவே தினசரி மாலை வேளையில் அருமனை சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவர் ஜெயின் கடந்த 2016- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கம்போல் அருமனை சந்திப்பில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றபோது அருமனை சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா குமார், போக்குவரத்துக்கு இடையூறாக காரை நிறுத்தி இருப்பதாகக் கூறி மருத்துவரின் கார் டயரில் காற்றை திறந்துவிட்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து மருத்துவர் ஜெயின் தான் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தவில்லை எனக்கூறி உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2017- ஆம் ஆண்டு குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது வழக்கை விசாரித்த குழித்துறை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி தர்மபிரபு தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் மருத்துவரின் காரை சேதப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் பிரபா குமாருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற செலவாக 8 ஆயிரத்து 439-ஐ  மருத்துவருக்கு ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |