அரசு பேருந்தில் 40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் பக்கம் கிராமத்தில் இருக்கும் சோதனை சாவடியில் மணலூர்பேட்டை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த கர்நாடக மாநில அரசு பேருந்ததை நிறுத்தி சோதனை செய்ததில் வாலிபர் ஒருவரிடம் இருந்த பையை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் இருக்கும் முருகன் கோவில் தெருவில் வசிக்கும் கார்த்திகேயன் என்பதும், பெங்களூருவிலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.