பேருந்தில் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூருவிலிருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் வாலிபர் ஒருவர் வைத்திருந்த இரண்டு பைகளை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது 20 கிலோ எடையுடைய 975 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து விசாரணையில் அந்த வாலிபர் கீழமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் பழமலை என்பதும், பெங்களூருவிலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழமலையை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.