புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய மறுத்த விவகாரத்தில் போலீசார் தாக்கியதாக புகார்கள் கூறியுள்ள நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஓட்டேரியைச் சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். பல மாதங்களாக வாடகை தராமலும் தொடர்ந்து குடித்து விட்டு தகராறு செய்து வந்தாலும் வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் வீட்டை காலி செய்ய சீனிவாசன் மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஒன்றாம் தேதி விசாரணை நடத்திய புழல் காவல் ஆய்வாளர் சீனிவாசனை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் அன்று நள்ளிரவில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து கிழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல் ஆய்வாளர் தன்னை அடித்ததால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக சீனிவாசன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் பென்ஷம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் உயிரிழந்த சீனிவாசனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட சீனிவாசன் போதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.