மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஆனியம்பட்டி ஊராட்சி சாவடி தெருவைச் சேர்ந்த செல்லப்பன் மனைவி ஜெயக்கொடி மற்றும் 7-வது வார்டு முத்துக்கண்ணு மனைவி அலமேலு ஆகிய இருவரும் சோளக்காட்டில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவரும் மழையில் நனையாமல் இருப்பதற்காக அங்கிருந்த ஒரு புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். அந்த வேளையில் அவர்கள் 2 பேர் மீது மின்னல் தாக்கியது.
இதனால் 2 பேரும் மயங்கி கீழே விழுந்தனர். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் முருகையன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்த ஜெயக்கொடிக்கு 2 மகன்களும், அலமேலுவுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.