மலை கிராமங்களில் பெய்து வரும் தொடர் மழையினால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பெரும்பாறை பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரானது ஆத்தூர் காமராஜர் அணைக்கு சென்று சேர்கிறது. கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, தடியங்குடிசை, குப்பம்மாள்பட்டி, கள்ளக்கிணறு, ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை ஆகிய மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான மழை பெய்து வருவதால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டே இருக்கிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இருசக்கரவாகனம், கார் மூலம் இந்த நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்துள்ளனர்.