கடந்த 2019 ஆம் ஆண்டு இதே நாள் எந்த ஒரு இந்தியராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. 40 ரத்தினங்களை இந்தியா பறிகொடுத்த தினம். நம் தேசத்தை உயிர் மூச்சாக கொண்டுடிருந்த 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த தினம். பிப்ரவரி 14 2019 அதிகாலை 3:15 மணிக்கு 78 பேருந்துகளில் மொத்தம் 2547 சிஆர்பிஎஃப் வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சென்றுகொண்டிருந்தனர். லத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கு அருகில் சென்றபோது ஸ்கார்பியோ வகை வாகனம் ஒன்று பாதுகாப்பு படையினரின் பேருந்து ஒன்றில் மோதி வெடித்தது அந்த வாகனத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் இருந்ததாகவும் அதனை அகமது தார் என்பவர் ஓட்டி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாருமே சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலில் 76 பட்டாளியனில் சேர்ந்த 40 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலைக் கண்டு ஒவ்வொரு இந்தியனும் கொதித்தெழுந்தனர் என்று கூறலாம். பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். வீரர்களின் உயிர் இழப்புகள் வீண் போகக்கூடாது என்பதும் அனைவரின் எண்ணமாக இருந்தது. அமெரிக்கா சீனா பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை என உலக நாடுகளும் இந்த தாக்குதலுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற உறுதி மேலோங்கி எழுந்த நிலையில் இதற்கு தக்க பதிலடியும் இந்தியா தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூறத்தக்கது
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே இயங்கி வந்த பயங்கரவாதிகள் முகாமை குண்டு வீசித் தகர்த்தது. இந்திய விமான படையின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் சுமார் 1000 கிலோ அளவிலான வெடிகுண்டுகளைக் கொண்டு பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 2௦௦க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலடி வீரர்களின் வீர மரணத்திற்கு பதிலாக அமைந்தாலும் நமது வீரர்களின் இழப்பு பேரிழப்பு. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களை இந்நாள் இந்தியாவுக்கு கருப்பு நாள் என்றே கூறலாம்.