பேரிடரின் பொழுது எவ்வாறு தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார்.
புனே சர்வதேச மையம் சார்பாக பேரிடர் தயார்நிலை குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாடானது மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரில் இன்று துவங்குகிறது. மேலும் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடாட்டில் அனைத்து வகையான பேரிடர்களையும் ஒரு நாடு எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் காணொளி மூலம் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது “ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த இயலாது. அனைத்து பகுதிகளிலும் அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நிதி, உட்கட்டமைப்பு வசதிகள், சாதனங்கள் போன்றவை அத்தியாவசியமாகும்.
இது மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரு பகுதிகயில் மட்டும் முறையான வசதி இருந்தால் போதாது. அனைத்து இடங்களிலும் ஆய்வகங்கள் தேவை. அதிலும் அனைத்து மட்டங்களிலும் உள்ள பணியாளர்கள் தங்களது பயிற்சி மற்றும் திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
இதனை அடுத்து நம்மிடம் ஆரம்ப சுகாதாரத்தில் அதிக அளவு முதலீடு தேவைப்படுகிறது.நாம் அனைவரும் கடுமையான சூழலை சந்தித்துள்ளோம். இருப்பினும் இப்போது நாம் சர்வதேச அளவில் நோயறிதலுக்கான விழிப்புணர்வை பற்றி சிந்திக்காமல் இருக்கிறோம். குறிப்பாக உரிய நேரத்தில் நாம் சரியான நடவடிக்கைகளை கையாளவில்லை என்றால் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு பெரிய பேரிடரை சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்