சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் ஆதாரமில்லாமல் வதந்திகளை பரப்புவோருக்கு 5 வருடம் ஆயுள் தண்டனையும், பெரிய தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
இணையதளங்களில் ஆதாரமில்லாமல் பரப்பப்படும் வதந்திகள் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை அன்று தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவினரின் கச்சேரி நடக்கவிருந்தது. இதற்காக ரசிகர்கள் அதிகமாக கூடியிருந்தனர்.
ஆனால், காற்று பலமாக வீசியதால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. எனவே, மக்கள் புறநகர் பகுதி மைதானத்திலிருந்து அவரவர் வீட்டிற்கு திரும்புவதற்குள் பெரும் திண்டாட்டம் ஏற்பட்டது. அதன்பின்பு, இணையதளங்களில் சிறுமிகள் மாயமானதாகவும் பாலியல் வன்கொடுமை நடந்ததாகவும் தகவல் பரப்பப்பட்டது.
இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஹேஸ்டேக்குகள் அதிகரித்தது. ஆனால், இது உண்மையா? என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் இருந்த பலரும் இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறார்கள். மேலும், இக்கட்டான சூழ்நிலையிலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் பெண்களை துன்புறுத்தியதாக சில ஆண்களின் புகைப்படங்களும் இணைய தளங்களில் பரவியது. அந்த ஆண்களின் புகைப்படங்கள் இணையத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் சவுதி அரேபியாவின் பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவரான துர்கி அல் ஷேக், அந்த செய்திகள் முழுவதும் தவறு என்று பலமுறை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இணையதளங்களில் தகவல் வெளியிட்டவர்கள் மற்றும் விவாதம் செய்தவர்கள் அச்சுறுத்தலால் கணக்குகளை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தான், சவுதி அரேபிய அரசு இணையதளங்களில் தவறான தகவல்களை ஆதாரமில்லாமல் பரப்பினால் 5 ஆண்டு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.