Categories
மாநில செய்திகள்

‘தமிழகத்தின் முதல் புனிதர்’…. கன்னியாகுமரியில் பிறந்த சாமானியர்…. வாடிகனில் நடைபெறவுள்ள விழா….!!

புனிதர் பட்டமானது கன்னியாகுமரியில் மறைந்த தேவசகாயத்திற்கு வழங்கப்படவுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் வாசுதேவன் தேவகியம்மை தம்பதியருக்கு மகவாய் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார். அதிலும் இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் 1745 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்றார். இதனையடுத்து ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து 1752ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி  சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைசாட்சி என அறிவிக்கப்பட்டார்.

தற்போது தமிழக கத்தோலிக்க திருச்சபை, கோட்டார் மறை மாவட்டம், மற்றும் இறைமக்கள் போன்றோரின் சார்பாக வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராய குழுவிற்கு வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளனர். அதில் புனிதர் பட்டமானது மறைந்த தேவசகாயத்திற்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தேவசகாயம் மறைசாட்சி முக்தி பெற்றவர் என்று 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி இவருக்கு புனிதர் பட்டம் வழங்கலாம் என்றும் அதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று போப் ஆண்டவர் தெரிவித்தார். இந்த நிலையில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

இவ்விழாவானது வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் ஆலயத்தில் நடைபெறும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கான கடிதத்தை  புனிதர் பட்ட பேராயத்தின் தலைமைச் செயலாளரான பேபியோ பபானே நேற்று தேவசகாயம் புனிதர் பட்ட திருப்பணிக்குழு வேண்டுகையாளரும் அருட்பணியாளருமான டான் ஜோசப் ஜான் எல்பெஸ்டனுக்கு அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து இக்கடிதத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் புனிதர் பட்ட திருப்பணியின் துணை வேண்டுகையாளர் மற்றும் கோட்டார் மறைமாவட்ட பொறுப்பாளருமான அருட்பணியாளர் ஜான் குழந்தைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் முதல் புனிதர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் புனிதர் என்ற பெருமையானது மறைந்த தேவசகாயம் அவர்களைச் சாரும்.

Categories

Tech |