Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

500-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…. தொல்லியல் துறையின் தகவல்….!!

புராதனச் சின்னங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அடைப்பதற்கு வலியுறுத்தியிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15- ம் தேதி முதல் 2 மாதமாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் புராதன சின்னங்களை திறக்கலாம் என்று மத்திய தொல்லியல் துறை அறிவித்திருந்தது. இதனால் நேற்று இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள புராதன சின்னங்கள் திறக்கப்பட்டது. அதன்படி தாஜ்மஹால் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் மாமல்லபுரம் கடற்கரை கோவில் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தில் கொரோனா தொற்று  தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கபடாததால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கவில்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கொரோனா தொற்று குறைந்ததும் தமிழக அரசின் ஒப்புதலுடன் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்படுவதாகவும் அதுவரை தடை நீட்டிக்கபட்டுள்ளதாகவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு தங்களுக்கு மீண்டும் வாழ்வாதாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சுற்றுலா வழிகாட்டிகள், வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள் என சுற்றுலாவை நம்பி வாழ்க்கை நடத்தும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் சுற்றுலா வழிகாட்டிகள், சிறு வியாபாரிகள் என சுற்றுலாவை நம்பி வாழ்பவர்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும் தங்கள் விடுதிகளுக்கு வரிவிதிப்பு மற்றும் மின் கட்டணத்தில் சலுகை தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு உடனடியாக இதனை திறக்க தொல்லியல் துறைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பின் புராதன சின்னங்கள் திறக்கப்படாததால் பயணிகள் வரத்து இன்றி போதிய வியாபாரம் இருக்காது என்பதனால் மாமல்லபுரம், கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, அர்ச்சுனன் தபசு சாலை போன்ற இடங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Categories

Tech |