தொலைந்துபோன பர்சை காவல்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து கொடுத்த சம்பவம் புல்லரிக்க வைப்பதாக பர்சின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
காவல் துறையில் சில அதிகாரிகள் தவறு செய்வதால் ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டிற்கும் களங்கம் ஏற்படுகிறது. ஆனால், சில அக்மார்க் தங்கத்தைப் போல் சுத்தமான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் தங்களது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையில், மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, கடந்த 2006ம் ஆண்டு நவி மும்பையைச் சேர்ந்த ஹேமந்த் என்பவர் மின்சார ரயிலில் தனது பர்சை தவற விட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ரயில்வே காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து அவரது புகாரை ஏற்ற அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவரது பர்ஸ் அப்போது கிடைக்கவில்லை. இந்நிலையில் 14 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவரது பர்ஸ் கிடைத்துள்ளதாகவும், அதனை வந்து பெற்றுக் கொள்ளுமாறும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும், காவல் துறை அதிகாரியின் இந்த கடமை உணர்வு தன்னை புல்லரிக்கச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.