சிறப்பு பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு செல்பவருக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குமரி மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பவருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசு போக்குவரத்து கழக சார்பில் திருச்சி, திருப்பூர், மதுரை, கோவை, சென்னை போன்ற மாவட்டங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு பேருந்துகளில் மிகவும் குறைவாகவே பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு பேருந்திலும் 30 முதல் 45 பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். இதேபோன்று சென்னை உட்பட வெளி மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வரும் பேருந்துகளிலும் அதிக அளவு கூட்டம் காணப்படவில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, முதல் அலையின்போது பேருந்தில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. ஆனால் இரண்டாவது அலையின்போது பயணிகளின் கூட்டம் அதிகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.