அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீரான் பாளையம் பகுதியில் முத்துமாரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் முத்துமாரி காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்றபோது அங்கு முன்பகுதியின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்மன் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை திருடி தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.