மழைக்கு ஒழுகும் நூலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டி தருமாறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சையது குளம் அருகாமையில் கிளை நூலகம் ஓன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த நூலகத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் 30-க்கும் அதிகமான வாசகர்கள் செய்தித்தாள்கள், மாத இதழ்கள் மற்றும் வார இதழ்கள் ஆகியவை படிப்பதற்காக வந்து செல்கின்றனர். அதன்பின் 100-க்கும் அதிகமான உறுப்பினர்கள் சந்தா செலுத்தி நூலகத்தில் இருக்கும் பல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்து வருகின்றனர்.
பின்னர் இங்கு வந்து வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு கூட இடமில்லாமல் புத்தகங்கள் அங்கங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த கட்டிடங்கள் பலவீனம் அடைந்து இருப்பதால் மழை பெய்தால் மழைநீர் காங்கிரீட் சுவற்றின் கீழ்ப்பாக்கம் கசிந்து புத்தகங்கள் மீது விழுகின்றது. இதனால் புத்தகங்கள் மழை நீரில் நனைந்து வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வாசகர்கள் கூறுகின்றனர்.
ஆதலால் நூலகங்களை திறந்து வைத்து விட்டு புத்தகங்களை அனுப்பி விட்டால் மட்டும் போதும் என நினைக்கும் அதிகாரிகள் அவற்றை முறையாக பாதுகாக்க கட்டிட வசதிகளையும், வாசகர்கள் அமர்ந்து படிக்க இட வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தருமாறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.