Categories
உலக செய்திகள்

‘ஆரம்பத்திலேயே மட்டுப்படுத்த வேண்டும்’…. புதிய வகை கொரோனா தொற்று பரவல்…. மருத்துவர்கள் கருத்து தெரிவிப்பு….!!

புதிய வகை கொரோனா தொற்று பரவலை ஆரம்பத்திலேயே மட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்காக மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை செலுத்தும் பணிகளை தீவிரமாக்கியது. இருப்பினும் கொரோனா தொற்று பல்வேறு விதத்தில் உருமாற தொடங்கி அதன் தீவிரத்தை பன்மடங்கு பெருக்கியது. குறிப்பாக ஒரு வைரஸ் கிருமி தனது சுற்றுச் சூழலைப் பொறுத்து உருமாற்றம் அடையும் தன்மையை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்யும் என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் கொரோனா தொற்றானது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை  ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் போன்று பல்வேறு வகைகளாக உருமாறி வருகிறது. இதில் ஆல்பா வகையான தொற்றானது இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகமாக  பரவியது. இந்த உருமாறிய கொரோனா தொற்றினால் 172 நாடுகள் பாதிப்படைந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பீட்டா என்ற உருமாறிய கொரோனா தொற்றானது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இது அந்நாட்டில் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த உருமாறிய கொரோனா தொற்றானது  120 நாடுகளில் பரவியது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இது போன்று மற்றொரு வகையான காமா தொற்றானது பிரேசிலில் உள்ள மானாஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நோயினால் அதிக அளவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இது சுமார் 72 நாடுகளில் பரவியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகப்படியான உயிர் சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியது டெல்டா வகை தொற்றாகும். இந்த உருமாறிய கொரோனா தொற்றினால் 96 உலக நாடுகள் பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனா தொற்றானது ஆல்பா வகையை விட 55% வேகமாக பரவும் திறன் கொண்டது.

இதனை தொடர்ந்து டெல்டா பிளஸ் என்னும் உருமாறிய தொற்றானது வேகமாக பரவி அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது டெல்டா வகை கொரோனா தொற்றின் துணை வம்சத்தை சேர்ந்த  AY 4.2 என்னும் வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது வேகமாக பரவும் தன்மை உடையது என்று ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா கூறியுள்ளார்.

மேலும் இதனால் ஏற்படும் உயிரிழப்பும் குறைவாகவே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த வகை வைரஸ் ஆனது தீவிரமாக பரவும் தன்மை உடையது. இருப்பினும் அதிக அளவு பாதிப்பை உண்டாக்கும் என்பதற்கும் தடுப்பூசியால் இதனை மட்டுப்படுத்த இயலாது என்பதற்கும் எந்தவொரு சான்றுகளும் இல்லை” என்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் சில பகுதிகளில் முதன் முதலாக டெல்டா வகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள AY 4.2 வைரஸின் பரவலுக்கு முன்பாகவே அதனை மட்டுப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |