தமிழக அரசு புதிய வகை கொரானா வைரஸை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில், புற்றுநோய் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திட்ட அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டு 65ஆயிரத்து 590 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தா ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.பின்பு நிருபர்களிடம் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.
அதில் , லண்டனில் இருந்து வந்த பயணிகள் 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் மொத்தம் 28 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக லண்டனில் இருந்து வரும் பயணிகளின் விவரம் இ-பாஸ் நடைமுறை காரணமாக அரசிடம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
தேனி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கண்டறிய பட்டவர்கள் லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் அல்ல. பெங்களூருவில் இருந்து சாலை வழியாக தமிழகம் வந்தவர்கள். பாதிப்புக்கு உள்ளானவர்களின் மாதிரிகளை ஆய்வுகளுக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.இங்கிலாந்து நாட்டில் தான் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இந்தியாவில் இன்னும் தடுப்பூசி வரவில்லை.
கொரோனாவாக இருந்தாலும், உருமாறிய புதிய வைரஸ் ஆக இருந்தாலும் அதனைக் கட்டுப்படுத்தும் ஆயுதம் முகக்கவசம் மட்டும்தான். புத்தாண்டு கொண்டாட்டத்தை தடை செய்தது மக்களின் நன்மைக்காகவே. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். எப்பேர்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் வந்தாலும் தமிழக அரசு அந்த சவாலை எதிர்கொண்டு வெற்றி அடையும், என்று கூறினார்.