புதுமாப்பிள்ளை திருமணமான 4 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி தியாகராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கழிவறையில் இருக்கும் ஜன்னலில் நைலான் கயிறை கட்டி தியாகராஜன் தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின் அவர்கள் உடனடியாக தியாகராஜனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான 4 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.