புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தாண்டவன்குளம் பகுதியில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொக்லைன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ்குமார் ஜெயலட்சுமி என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமி கர்ப்பமாக இருந்தால் தனது மனைவியுடன் சந்தோஷ் குமார் தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது மாமனார் வீட்டில் கழிப்பறையிலிருந்த பல்பு எரியாததால் அதை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சந்தோஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.