இவர்கள் குறித்த தகவலைக் கொடுப்போருக்கு கேரள காவல் துறையினர் ஏற்கனவே ரூ.5 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும், தமிழ்நாடு காவல்துறை ரூ.4 லட்சம் வெகுமதி வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. இச்சூழலில் கொலையாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபிக் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள், மாவட்ட காவல் தனிப்பிரிவிற்கு 04652 220167 என்ற எண்ணிலோ, 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்போரின் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே நேற்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என 3 பேரை கேரளாவில் பிடித்த தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்கள் 11 பேருமே கொலையாளிகளுடன் அடிக்கடி தொடர்பிலிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆவர். இந்த விசாரணையின்போது குற்றவாளிகள் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தவ்பீக், அப்துல் சமீமுடன் தொடர்பிலிருந்த பயங்கரவாதிகள் பெங்களூர் மற்றும் பிற பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருவதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இக்கொலையை நடத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு பணி ஓய்வுபெறும் நிலையிலும் உடல் பலம் குறைந்த நிலையிலும் காணப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை குறிவைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அதிக ஆள்நடமாட்டம் இல்லாத வேலைநிறுத்த தினமான ஜனவரி 8ஆம் தேதியையும், மறைவுப் பகுதியில் இருப்பதைப் போன்ற சோதனைச் சாவடியையும் திட்டமிட்டுத் தேர்வு செய்துள்ளனர்.
வில்சனைக் கொலை செய்த பின்பு கார் அல்லது வேறு வாகனத்தில் தப்பிச் சென்றால் காவல் துறையினரின் கடும் வாகனச் சோதனையில் கண்டிப்பாக சிக்கக்கூடும் என்பதைக் கணித்து, கொலைசெய்த பின்பு பக்கத்திலுள்ள கேரள எல்லைப் பகுதியான இஞ்சிவிளை வரை வாகனம் ஏதுமின்றி நடந்தே சென்றுள்ளனர். காவல் துறையினரைத் திசைதிருப்பி சினிமா பாணியில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தமிழ்நாடு காவல் இயக்குநர் திரிபாதி உத்தரவின்பேரில், தென்மண்டல காவல் துறை தலைவர் சண்முக ராஜேஷ்வரன் மேற்பார்வையில் குற்றவாளிகளைப் பிடிக்க பலகட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. காவல் துறையிலுள்ள நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்கள் பயன்படுத்திய கைபேசி எண், டவர் போன்றவற்றின் மூலம் கொலையாளிகள் மறைந்திருக்கும் இடங்களைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.