ரஷ்ய அதிபர் புடின், ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோ படைகளையும், ராணுவ கூட்டமைப்பையும் அனுமதித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மேட்ரிக் நகரத்தில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் சுவீடன் மற்றும் பில்லாந்து நாடுகள் இணைய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து துருக்கி தங்களின் எதிர்ப்பிலிருந்து விலகியது. எனவே, அந்த இரு நாடுகளும் நேட்டோவில் இணைய கையெழுத்து ஒப்பந்தமானது. அதன்பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துருக்கியை பாராட்டினார். ஆனால், இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்ததாவது, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேர்வதற்கு ரஷ்யா வருத்தப்படவில்லை.
அவர்களின் விருப்பப்படி இணைந்து கொள்ளட்டும். ஆனால் ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். தற்போது வரை அந்த பகுதிகளிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்கிறது. ஆனால், இனிமேல் அந்த பகுதிகளில் ராணுவ படைகள் நிறுத்தப்பட்டாலோ அல்லது உட்கட்டமைப்பை உருவாக்கி, எங்களை எதிர்த்து அச்சுறுத்தல் வெளியிடப்பட்டாலோ தகுந்த பதிலடி கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்.