Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் சிரமப்பட்ட மகன்…. தந்தையின் கொடூர செயல்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

புற்றுநோயால் சிரமப்பட்டு வந்த மகனுக்கு விஷ ஊசியினை செலுத்தி தந்தை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சுபள்ளி குட்டைக் காரன் வளவு பகுதியில் பெரியசாமி-சசிகலா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு செந்தமிழ், வண்ணத்தமிழ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் வண்ணத்தமிழ் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தார். கடந்த வருடம் வண்ணத்தமிழ் சைக்கிள் ஓட்டி பழகியபோது கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனால் காலில் காயமடைந்த வண்ணத்தமிழுக்கு அந்த நேரத்தில் இருந்த கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையால் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் அவரது பெற்றோர் வண்ணத்தமிழுக்கு உள்ளூர் மருத்துவமனையில் வைத்தியம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வண்ணத்தமிழின் காலில் காயம் இருந்த பகுதியில் புற்றுநோய் கட்டி உருவானதாக தெரிகிறது. இதன் காரணமாக வண்ணத்தமிழ் உடல்நிலை மோசமடைந்து காணப்பட்டதால் பெரியசாமி தனது மகனுக்கு தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்து வந்தார். இதனையடுத்து வண்ணத்தமிழ் காலில் ஏற்பட்ட புற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அவர் வேதனையில் துடித்தார். அதன்பின் வண்ணத்தமிழுக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாத சூழ்நிலையில், மகனின் துன்பத்தை காணப் பொறுக்காத பெரியசாமி அவரை கொலை செய்வது என முடிவு எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பகுதியில் உள்ள மருத்துவ உதவியாளர் ஒருவரை பெரியசாமி அணுகி தனது மகனுக்கு விஷ ஊசியை செலுத்தி கொலை செய்யும்படி  கேட்டுள்ளார். அதன்படி பெரியசாமி வீட்டுக்கு வந்த மருத்துவ உதவியாளர் வண்ணத்தமிழுக்கு விஷ ஊசியை போட்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் வண்ணத்தமிழ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வண்ணத்தமிழின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வண்ணத்தமிழுக்கு ஊசி போட்ட மருத்துவ உதவியாளர் மற்றும் தந்தை பெரியசாமி போன்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |