விஷ ஊசியினை செலுத்தி மகனை கொன்ற வழக்கில் 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கச்சுப்பள்ளி கிராமத்தில் பெரியசாமி-இலக்கியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகன் வண்ணத்தமிழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வருடம் வண்ணத்தமிழ் விளையாடிக் கொண்டிருக்கும்போது கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர் வண்ணத்தமிழுக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் புற்றுநோய் இருந்ததால் வண்ணத்தமிழுக்கு காயம் சரியாக வில்லை. இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வண்ணத்தமிழ் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அதன்பின் வண்ணத்தமிழ் வலியால் துடிதுடித்து வந்ததால் பெற்றோர் அவருக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் புற்றுநோய் காரணமாக சிரமப்பட்டு வந்த வண்ணத்தமிழை பார்த்து பெரியசாமி வேதனையடைந்தார். மேலும் வண்ணத்தமிழ் மெலிந்து வந்ததால் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு பெரியசாமி விபரீத முடிவை எடுத்துள்ளார். அதன்படி தனது மகனுக்கு பெரியசாமி விஷ ஊசியினை செலுத்தி கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக கொங்கணாபுரம் பகுதியில் தனியார் பரிசோதனை ஆய்வகம் மேற்கொண்டு வரும் கன்னந்தேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் தனது மகளை கருணை கொலை செய்ய பெரியசாமி ஆலோசனை கேட்டுள்ளார். அவரது அறிவுரையின்படி குரும்பப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரை பெரியசாமி அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனைத்தொடர்ந்து பிரபு காய்ச்சல், தோல் வெடிப்பு மற்றும் அரிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து ஊசியை வண்ணத்தமிழுக்கு செலுத்தியுள்ளார்.
இதனால் சிறிது நேரத்தில் வண்ணதமிழ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வண்ணத்தமிழின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை விஷ ஊசியினை செலுத்தி கொலை செய்ததாக கூறி பெரியசாமி மற்றும் பிரபு இருவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். அதன்பின் இருவரும் கொங்கணாபுரம் போலீசில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தனியார் பரிசோதனை ஆய்வக உரிமையாளர் வெங்கடேஷை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு பெரியசாமி, பிரபு, வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.