அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமையாசிரியர் அறை முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த மைதானத்தில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் சில பேர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் அந்த மைதானத்தை பூட்டு போட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு பிளஸ்-2 மாணவர்கள் 13 பேர் தலைமையாசிரியர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது மாணவர்கள் கூறியதாவது “நாங்கள் தேசிய, மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளோம். ஆனால் தற்போது மைதானத்தை திறக்காததால் எங்களால் பயிற்சி செய்ய முடியவில்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பள்ளிக்கூட மைதானத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர். அதற்கு காவல்துறையினர் “இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாணவர்களிடம் கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.