பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானத்தை திறக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 6-வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 969 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்குள்ள விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தில் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் சிலர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இதனால் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் கைப்பந்து விளையாடகூடாது என மாணவர்களை கண்டித்துள்ளனர். மேலும் அங்கு யாரும் விளையாடாதபடி மைதானத்தை பூட்டு போட்டுவிட்டதாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தின் முன் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உதவி ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது “இந்த பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்கள் தேசிய, மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்கூடத்தின் மைதானம் திறக்கப்படாததால் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பள்ளிக்கூட மைதானத்தை திறந்து மாணவர்கள் கைப்பந்து விளையாட அனுமதி கொடுக்க வேண்டும்” என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அதிகாரிகள் கூறியதாவது ” இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டு இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என தெரிவித்தனர். அதன்பின் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.