முள்ளு கத்தரி காய்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்க தோட்டக்கலையின் சார்பில் திட்டம் தீட்டியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய முள்ளு கத்தரிக்காய்க்கு அதிக விலை இருக்கின்றது. இதனையடுத்து இலவம்பாடி கத்திரிக்காய் எனப்படும் இந்த காய் அணைக்கட்டு தாலுகா இலவம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தார்வழி, குடிசை, மருதவல்லி பாளையம், நாட்டார்மங்கலம், நரசிங்கபுரம், ஈச்சங்காடு, பொய்கை, புதூர், சத்தியமங்கலம், ராமாபுரம் போன்ற பகுதியில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே மிகவும் ருசியாக உள்ள இந்த கத்தரிக் காய்களுக்கு தமிழக அரசின் தோட்டக்கலையின் சார்பாக சீக்கிரம் புவிசார் குறியீடு கொடுப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளது. இந்நிலையில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா நாட்டார்மங்கலம் பகுதியில் உள்ள கத்தரிக்காய் தோட்டங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விவசாயிகள் இலவம்பாடி கத்தரிக்காயை சந்தைப்படுத்த போதுமான வசதி இல்லை என்றும் நாங்கள் பயிரிடும் கத்திரிக்காயை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இயற்கை உரத்தை அரசு தயாரித்து மானியத்தில் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பின் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா விவசாயிகளின் கோரிக்கையை அரசு கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜ்குமார், வேளாண்மை அலுவலர் டேவிட் ராஜ்குமார் சுதாகர், உதவி தோட்டக்கலை அலுவலர் முரளி போன்றோர் அவருடன் இருந்தனர்.