இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியரின் இளையமகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர்.
அவர்கள் இது தொடர்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தையோ, இளவரசர் சார்லஸ் உள்ளிட்டவர்களையோ கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்தது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் பொருளாதார சுதந்திரத்தைப் பெறுகிறவகையில் முழுநேர பணிக்குச் செல்லவும், சொந்த காலில் நிற்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் இங்கிலாந்துக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையே தங்கள் காலத்தை கழிக்க விரும்புகின்றனர்.
இந்நிலையில் இளவரசர் ஹாரி-மேகனை ராணி எலிசபெத் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அரச குடும்பத்து தம்பதியினரின் முடிவுக்கு அவர் இசைவு தெரிவித்துவிட்டார். இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் எதிர்காலம் குறித்தும் ராணி பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் அரச குடும்பத்தை விட்டு விலக, அவர்களுக்கு இருந்த பொறுப்பு மட்டும் காரணமல்ல. கடந்த சில வாரங்களுக்கு ஹாரி தகவல் ஒன்றை தெரிவித்திருந்தார். அதில் கடந்த காலத்தில் என் தாயார் டயானாவை இழந்துவிட்டேன்.
தற்போது என் மனைவிக்கு குறிவைக்கிறார்கள். அவரை இழக்கமாட்டேன் என்று உருக்கமாகக் கருத்து பதிவிட்டிருந்தார். இது அப்போது வைரலானது. இந்நிலையில் அவர் அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.