Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு முடிவுக்கு அப்புறம் என்ன பண்ண போறீங்க – கேள்விகளை அடுக்கிய திருமாவளவன்

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்போகும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார் 

உலகையே அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகு மத்திய அரசு என்ன செய்யும், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியப் படுத்தப்படவில்லை. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கேட்டுள்ளது “21 நாட்கள் முழுஅடைப்பு முடிந்து ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு என்ன செய்ய போகிறார்கள் என்பதை மத்திய அரசு இப்போதே மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். முன்னதாகவே மக்களை அந்த சூழலுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிக்கு பின்னர் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என மக்கள் பலரும் நம்பி வருகின்றனர்.  வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களும் சொந்த ஊர் திரும்பி விடலாம் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

மாணவர்களும் தேர்வுகள் பாதியில் தள்ளி போடப்பட்டதால் பதற்றத்துடன் காணப்படுகின்றனர். ஆனால் மருத்துவர்களோ மே, ஜூன் மாதங்களில் தான் கொரோனா தொற்றின் வீரியம் இந்தியாவில் அதிக அளவு இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புமா அல்லது இந்தத் தடை நீடிக்குமா என்பது பற்றிய தெளிவான கருத்தை மத்திய அரசு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.நாளை நடத்தப்பட இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோன தொற்றை எதிர்கொள்ள தேவையான  உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்போதே வென்டிலேட்டரின் பற்றாக்குறை அங்கங்கு வெளிப்படத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து 36 ஆயிரம் வென்டிலேட்டர் வர வைப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால் எப்போது கிடைக்கும் என்பது பற்றி தெளிவான தகவல் இதுவரை இல்லை. மூன்றாவது கட்டத்தை இந்தியாவில் கொரோனா பரவல் தொட்டு விட்டால் அதை சமாளிக்கும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் இல்லை. இது அனைவருக்கும் மிகப்பெரிய அச்சத்தை கொடுக்கின்றது.

நமக்கு தேவைப்படும் சோதனை கருவிகள், முகக் கவசங்கள், மருத்துவமனை படுக்கைகள், வெண்டிலேட்டர் எவ்வளவு?  ஏற்கனவே தயார் நிலையில் இருப்பது எவ்வளவு? மேலும் தேவைப்படும் உபகரணங்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க பிரதமரை கேட்டுக் கொள்கிறோம். மேலும் தடை காலம் நீடிப்பு எண்ணம் இருந்தால் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரிக்கும். அதை தடுப்பதற்காக அரசு எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் விவசாய பணிகளை தொடங்கவும் உணவு பொருட்கள் எந்த தடையுமின்றி கிடைக்கவும் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மளிகை பொருட்கள் எந்த ஒரு தடையுமின்றி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேபோன்று பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு  குறித்து சரியான விபரத்தை மத்திய மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.

Categories

Tech |