கிராம மக்களின் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்த ராணுவ ஆட்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது அந்நாட்டு ராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 845 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு பயந்து 3,000 த்திற்கும் மேலானோர் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர்.
இதனிடையே பல கிராமங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த கிளர்ச்சியாளர்கள் எப்போதாவது ராணுவ வீரர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராணுவத்தினர்களும் கிளர்ச்சியாளர்களின் மீது தாக்குதல் நடத்துவதால் பல உயிர் சேதங்கள் இருதரப்பிலும் ஏற்படுகிறது.
இந்நிலையில் ஹஸ்தி என்ற கிராமத்திலிருக்கும் கிளர்ச்சியாளர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்ய சென்றுள்ளனர். அப்போது ஹஸ்தி கிராம மக்கள் ராணுவத்தினரின் மீது வில், அம்பு கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் பொதுமக்களை சுட்டுத் தள்ளியுள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் படுகாயமடைந்தனர்.