தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலராக புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணன் பற்றிய தொகுப்பு.
இந்திய ஆட்சியர் பணிக்கான தேர்வை சிறந்தமுறையில் முடித்துவிட்டு 1994ஆம் வருடம் தூத்துக்குடி மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 2004 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பொழுது தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவரது நடவடிக்கைகள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால் இவரது சுனாமி பேரிடர் மீட்பு பணி தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பன்னாட்டு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் இலங்கை ஆகிய இடங்களில் இருந்து பேரிடர் மீட்புப் பணி குறித்து இவரது அனுபவத்தை பகிர அழைப்பு விடுக்கப்பட்டது. மார்ச் மாதம் 2009 முதல் மார்ச் 2012 வரை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை குழுவின் தலைமை வகித்து வந்தார்.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் சுகாதாரத் துறை செயலராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு வரை அதே துறையில் பணி புரிந்ததால் அனுபவம் அதிகம் பெற்ற அவரை புதிய சுகாதார துறை செயலராக தமிழ்நாடு அரசு அறிவித்தது. கொரோனா தொற்று அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இவரது நிர்வாகத் திறன் நல்ல பயனைக் கொடுக்கும் என கூறப்படுகின்றது.