ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும் திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 203 தபால் ஓட்டுகளை எண்ணவும், 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் மறு எண்ணிக்கை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து, உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்குகளை என்னும் பணியில் 24 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே தபால் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மறு வாக்குப்பதிவு பதிவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.