ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின் அப்பாவு 69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நிராகரிக்கப்பட்ட வாக்குகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 19 20 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை சமர்ப்பிக்கவும், தலைமை பதிவாளரிடம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தபால் வாக்குகளை அக்டோபர் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.