உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க திரு ராகுல் காந்தி திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் ஆதிராசுக்கு விரைந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ஆம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசர கதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்ராசில் 144 தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி கீழேே தள்ளிவிட்டு பின்னர் கைது செய்தனர். இந்த நிலையில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக திரு ராகுல்காந்தி திருமதி பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்பிக்கள் குழு இன்று மீண்டும் அத்ராஸ் புறப்பட்டது.
இதனால் டெல்லி உத்தர பிரதேச எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். டெல்லி நொய்டா பிளைவேயில் காரில் சென்ற காங்கிரஸ் குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து திரு ராகுல் காந்தி திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே ஹத்ராஸ் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதை அடுத்து அவர்கள் ஹத்ராஸ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து கொல்கட்டாவில் மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பிர்லா கோளரங்கம் முதல் காந்திசிலை வரை நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில் திரு திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.