இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக ரோஹித் – தவான் இணை களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 81 ரன்கள் சேர்த்தது. அதன்பின் ஸாம்பா வீசிய பந்தில் ரோஹித் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் விராட் கோலி மீண்டும் பழைய இடமான மூன்றாவது இடத்தில் களமிறங்க, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக ஏறத்தொடங்கியது.
இதையடுத்து தவான் 29ஆவது அரைசதத்தைக் கடந்து அதிரடியாக ஆட, மறுமுனையில் கோலி ஸ்ட்ரைக்கை தவானிடம் ஒப்படைத்தார். இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தபோது 96 ரன்களில் இருந்த தவான் ஆட்டமிழந்து சதத்தை மிஸ் செய்தார். அதன்பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் ஆட்டமிழக்க, முதன்முறையாக ராகுல் ஐந்தாவது வீரராக களம் புகுந்தார்.
இதையடுத்து கோலி – ராகுல் இணை ஆஸ்திரேலிய பந்துவீச்சை எளிதாக எதிர்த்து ஆடத்தொடங்கியது. கோலி தனது 56ஆவது ஒருநாள் அரைசதத்தை கடந்து அதிரடியில் மிரட்ட, எதிர்பாராவிதமாக ஸாம்பா பந்தில் 78 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின் வாய்ப்புக்காக காத்திருந்த மனீஷ் பாண்டே களமிறங்கி 2 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழக்க, ராகுல் – ஜடேஜா இணை சேர்ந்தது. இந்த இணை சேர்ந்து 33 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கடைசி ஓவரில் ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாக, இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஸாம்பா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.