திருவள்ளூரில் ரயில் மூலமாக மதுபாட்டில்களை ,கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வருகின்ற 7 ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வணிக வளாகங்கள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ,ஹோட்டல்கள் மற்றும் மதுக்கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி ரயில் மூலமாக ,தமிழகத்திற்கு மது பாட்டிலை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக, புகார்கள் எழுந்து வந்தது. இதனால் இதனை கண்காணிக்க ரயில்வே இரும்புப் பாதை காவல் துறை இயக்குனரான சைலேந்திரபாபு , ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். இவரது உத்தரவின் பேரில் போலீசார் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று திருவள்ளூர் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் கிரி மற்றும் போலீசார் ஆகியோர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து, சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் கற்குழாய் தெருவை சேர்ந்த 33 வயதான வெங்கடேசன் என்பவர் ,ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வந்து 28 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திராவிலிருந்து மதுபாட்டில்களை வாங்கிவந்து கள்ளத்தனமாக திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.