பாதுகாப்பு படை வீரர் 90 வயது மூதாட்டியை பத்திரமாக தூக்கிக்கொண்டு ரயிலில் ஏற்றி விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை எண் 8-ல் வந்து நின்றுள்ளது. அப்போது ஒவ்வொரு பயணிகளும் வேகமாக ரயிலுக்குள் ஏறியுள்ளனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் ரயிலில் முயற்சிசெய்து “ரயிலை நிறுத்துங்கள்” என எஞ்சின் டிரைவரைப் பார்த்து கத்திக்கொண்டே நடைமேடை படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துள்ளனர். இதில் 90 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாததால் படிக்கட்டில் இருந்து மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தபோது ரயிலை இயக்க எஞ்சின் டிரைவர் தயாராகியுள்ளார்.
இதனை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஜோஸ் என்பவர் அந்த மூதாட்டியை தூக்கிக்கொண்டு அவரை பத்திரமாக ரயிலில் ஏற்றி விட்டார். இவ்வாறு மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் மூதாட்டியை பத்திரமாக ரயிலில் ஏற்றி மனிதநேயத்துடன் உதவி செய்த ஜோசை அனைவரும் பாராட்டியுள்ளனர். மேலும் இவர் இதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக எழும்பூர் கொள்ளம் எக்பிரஸ் ரயிலில் ஏற முயன்று நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் கீழே விழுந்த அமீதா பானு என்ற பெண்ணை பத்திரமாக மீட்டு அவரின் உயிரை காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.