ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரியான காளிமுத்து சேகர் என்பவர் தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் அடிபட்டு இறந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அந்த வாலிபர் வெள்ளை நிற அரைக்கை சட்டையும், அரக்கு கலரில் பனியன் மற்றும் பேண்ட், கருப்பு கலரில் பெல்ட் ஆகியவை அணிந்திருந்தார். இதனையடுத்து வேறு எந்த அடையாளமும் இல்லை. மேலும் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் வாலிபர் யார்? ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.