Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீரென்று பெய்த மழை…. மகிழ்ச்சியில் நாகை மக்கள்….!!

நாகையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது. இந்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் நாகையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கி 11 மணியளவில் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையானது சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |