அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையையிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாலத்தீவு, லட்சத்தீவு கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் குமாரி மாவட்டம் இரணியல், நாகர்கோவில் 7 செ.மீ. மழை பொழிந்துள்ளது. தக்கலை, திருபுவனத்தில் தலா 4 செ.மீ. மலை பொழிந்துள்ளது. மேலும் மதுரை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.